அணு உலை - ஏன் எதற்கு எப்படி? - 6

இதிலே மாற்று வழி மின்சாரம் பற்றி கொஞ்சம் விளக்கம் பார்ப்போம். அணு உலை பற்றி பேசும் போது மாற்றுவழி மின்சாரம் பற்றி பேசுவது தவிர்க்க இயலாததாகிறது. 

அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்கள் பெரும்பாலானோர் அணு உலையை ஆதரிப்பவர்களை கொடூரர்களாக, மனித உயிர்களை பலி கொடுத்து தன்னுடைய சுயநலத்தை அடைபவர்களாக சித்தரிப்பது வழக்கமாக நடக்கிறது. அணு உலைக்கு ஆதரவு என சொன்னாலே அடுத்த நிமிடமே அணு குண்டு நாட்டின் மீது வீசப்படுவது போன்ற சித்தரிப்பு நடக்கும் போது ஏன் வேண்டும் அணு உலை என சொல்லியாகவேண்டும். 

கூடவே அணு உலையை தயாரித்து இயக்கி அதிலே வேலை செய்யும் அனைவரும் முட்டாள்களா? அவர்களுக்கு இது எதுவுமே தெரியாதா? மாற்று வழி இருக்கும் போது அதிலே போகவேண்டியது தானே எதற்கு இந்த வேண்டாத வெட்டி வேலை போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும்.

பதிலை ஆற்றலின் அழியா விதியில் இருந்து ஆரம்பிப்போம். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும். இந்த விதி பெரும்பாலானோருக்கு தெரியும் என நினைக்கிறேன். :-)

இங்கே இரண்டு கேள்விகள். அதிகமாக கிடைக்கும் ஆற்றல் எது? அதை எதற்கு இன்னோர் ஆற்றலாக மாற்றவேண்டும்? 

இந்த உலகத்தில் அதிகமாக கிடைப்பது வெப்பம். அது சூரிய ஒளி என சொல்லித்தெரியவேண்டியதில்லை. அடுத்து கிடைப்பது வேதிவினை ஆற்றல். மரத்தை எரிப்பதில் இருந்து டீசல், பெட்ரோலை எரிப்பது வரை எல்லாம் வேதிவினையே. 
இதுவும் வெப்பமாகவே மாறும். சரி எதுக்கு இதை இன்னோர் ஆற்றலாக மாற்றவேண்டும்?

மனித குல வரலாற்றிலே போன இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வரை இந்த ஆற்றலை மாற்றவேண்டிய அவசியம் வரவே இல்லை. வெப்பத்தை அப்படியே பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்
. ஆற்றல் மாற்றத்தின் முதல் அவசியம் நீராவி இயந்திரத்தின் மூலம் வருகிறது. அதிலே வெப்பத்தை சுழலும் ஆற்றலாக மாற்றினார்கள். பின்பு பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதை கொண்டு வெப்ப இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் சாதனங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு பெரும்பாலான வெப்பம் மின்சாரம் ஆக்கவே செலவிடப்படுகிறது.

இங்க இன்னும் சிலகேள்விகள் கேக்கனும்.

இப்படி ஒரு ஆற்றலை இன்னோன்றாக மாற்றும் போது முழுவதுமாக மாறுமா இல்லை ஆற்றல் வீணாகுமா அதாவது பயன்படாமல் போகுமா? கூடவே ஏன் எல்லாத்தையும் மின்சாரம் ஆகவே மாத்தனும்? வீட்டுக்கொரு டீசல் என்ஜின் வச்சு அதன் மூலம் பேன், மிக்சி, கிரைண்டர், ஏசி கம்ப்ரஸர், பிர்ட்ஜ் கம்ப்ரஸர் எல்லாத்தையும் பெல்ட் போட்டு சுத்த விடக்கூடாதா? வீட்டுக்கொரு சோலார் பேனல் வைக்கலாம் என்றால் வீட்டுக்கொரு காற்றாலையும் டீசல் என்ஜினும் வைக்கலாம் அல்லவா?. அப்படிப்பட்ட யோசனை ஏன் உலகில் இருக்கும் அறிவாளிகளுக்கு தோணலை? :-)

ஏன் தோனலைன்னா வெப்ப எந்திரங்களின் பயனுறு திறன் மிகவும் குறைவு. டீசல் எந்திரங்கள் 30 சதம் தரும். அதிகப்படியா 50%. இது என்ஜினில் இருந்து வெளியே வரும் போது தான். அப்புறம் சக்கரத்தை சுழலவச்சு வண்டிய தள்ள வைக்கும் போது 10% சதம் தான் வரும். டுடால்ப் டீசல் 1892 இல் முதல் டீசல் என்ஜினை கண்டுபிடித்ததில் இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்படித்தான் இருக்கு. :-)
ஆனா மின்சாரத்தை வெப்பமாக மாற்றும் போதோ சுழல் ஆற்றலாக மாற்றும் போதோ 90% சதவீதம் வரை கிடைக்கும்.

அடுத்து வெப்பத்தை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கடத்துவதோ அல்லது அந்த தொழிற்சாலைகளில் அருகில் மனிதர்கள் வசிப்பதோ முடியாத காரியம். மின்சாரம் என்றால் கடத்தல் வெப்பத்தை விட மிக எளிது.

இப்போ வெப்பத்தை நேரிடையாக மின்சாரமாக மாற்றும் அமைப்பு ஒன்னே ஒன்னு தான். அது சோலார் பேனல். அதை விட்டா சுழல் இயக்கத்தை கொண்டு தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். சுழல் இயக்கம் தர்ற டர்பனை நீராவி கொண்டோ அதிக உயரத்தில் இருந்து வரும் தண்ணீர் கொண்டோ சுழல வைக்கலாம். இல்லாவிடில் டீசல்/பெட்ரோல் என்ஜின் கொண்டு சுழல வைக்கலாம். நீராவி கொண்டு தான் டர்பைன் சுழல வச்சு அணு உலையிலும் மின்சாரம் எடுக்கப்படுதுன்னு முன்பே சொல்லியிருக்கேன்.

டீசல் என்ஜின் தான் ஒரு நூத்தி பத்து இருபவது வருசமா மாறலை அப்படீன்னா சோலார் பேனலும் அப்படித்தான் இருக்கு. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற முடியும் என கண்டுபிடிச்சும் நூறு வருசத்துக்கு மேலாகுது. ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு கிடைச்சதும் இந்த கண்டுபிடிப்புக்கு தான். ஆனா இன்னமும் சோலார் பேனலில் பயனுறு திறன் 20% வீதத்தை தாண்டல. அதிலே ஒரு சதவீதம் கூட்ட முயற்சி செய்த அமெரிக்க கம்பெனி போன வருடம் திவால் ஆனது.

சரி இன்னும் ஏதாவது இருக்கா? இருக்கு. டீசல், பெட்ரோல், நிலக்கரி இவற்றை எரித்தால் வரும் மாசை விட அவை முக்கியமான ஒன்றை தின்று தீர்க்கின்றன. அது உயிர் வாழ தேவையான ஆக்சிஜன். ஆக்சிஜன் அளவு குறைய குறைய நோய்கள் வருவது பல மடங்கு பெருகும். சென்னையில் இருக்கும் காற்று அசுத்தத்தாலே பெரும்பாலான நோய்கள் வருகின்றன என சமீபத்திலே வந்த ஆய்வு ஒன்று சொல்லியது.

ஆகவே தான் இவற்றுக்கு மாற்றாக அணு உலை முன் வைக்கப்படுகிறது. அணு உலையின் இருந்து கிடைக்கும் வெப்பத்திற்கு ஆக்சிஜன் தேவையில்லை. புகை போன்ற பிரச்சினைகள் கிடையா. பாதுகாப்பாக கட்டினால் இயக்கினால் சுத்தமான சுகாதாரமான நோய் நொடி தராத மின்சாரம் கிடைக்கும்.

இதனாலே தான் ஆவ்சம் அமெரிக்கா 140 அணு உலைகளை இயக்குகிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலே அணு உலை வைத்திருக்கிறது. சீனாவும் அதன் வழியிலே போய் 120 அணு உலைகளை கட்டப்போகிறது.

இதை முன்னெடுப்பவர்கள் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதை தடுக்க முயல்கிறார்கள் என பாராட்டப்படவேண்டுமே தவிர கொலைகாரர்களாக சித்தரிக்கப்படக்கூடாது.