குழந்தையின் அழுகை. முத்தச்சத்தம்.
ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன்
மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை.
தொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது
கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு
செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற
தகடுகளில். யாருக்காக? அத்தனை விசேசமா அந்த நபர்?
1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான
வாயேஜரில்தான் இந்தத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்கள்
கழித்து இந்த ஓசைகளை கேட்கப்போகும் நபர் கேவலமான தோற்றம் கொண்ட ஒரு
வேற்றுகிரகவாசியாக இருப்பார் என்பது நம்பிக்கை. பூமி, மனிதகுலத்தின்
தோற்றம்/வளர்ச்சி பற்றி, மேலும் தகட்டை எப்படி இயக்குவது போன்ற தகவல்களும்
அதிலேயே உண்டு.
பெரும் பயணம்:
1970-களில் பெரும் பயணம் என்ற நாசாவின்
திட்ட நோக்கம் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதிகளை ஆராய்வது. எழுபதுகளின்
பின் பகுதியில் யுரேனஸ், வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ போன்ற
கிரகங்கள் சீரான வரிசையில் அமையும் அரிய நிகழ்வு விண்வெளியில் நடந்தது
(அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்வதை போல் அரியது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்). அந்த படிக்கட்டு போன்ற வரிசையை சரியாக
உபயோகித்தால், உண்டிவில்லில் கல்லை வைத்து அடிப்பது போல் குறைந்த சக்தியில்
செயற்கைகோளை எளிதில் மிக அப்பால் அனுப்பலாம். ஆனால் பணப்பற்றாக்குறையால்
அந்த திட்டம் முழு வெற்றியடையவில்லை. ஆனால் அதன் பயனாக நமக்கு கிடைத்தது
வாயேஜர் திட்டம், முந்திரி ஸ்வீட் வாங்க போய் பணமில்லாமல் பால் ஸ்வீட்
வாங்கிய மாதிரி..
1977-ல் வாயேஜர் 1, 2 என்று சிறிய அளவு
காரின் எடை கொண்ட இரட்டை விண்கலன்கள் முதலில் ஏவப்பட்டது வியாழன் மற்றும்
சனியை ஆராய. அனுப்பிய வேலை முடிந்ததும் அப்படியே விட்டு விடாமல்,
'இவனெல்லாம் அப்படியே போக விட்றணும்' என்று அதற்கு மேலும் பயணிக்க விட்டு
விட்டார்கள். சனி பார்வை பட்டால் ஆகாது என்று இங்கு ஒரு மூட நம்பிக்கை.
வாயேஜர் இரட்டையர்கள் சனியையே பார்த்துவிட்டு அப்பால் கிளம்பியவர்கள்.
இந்த இரு கலன்களும் சேகரித்த, சேகரித்துக்
கொண்டிருக்கும் தகவல்கள் இதுவரை ஏவப்பட்ட செயற்கை கோள்களிலேயே அதிக
உபயோகமாக இருப்பவை. சனியின் வளையங்களை பற்றி, வியாழனுக்கும்
(யுரேனஸ்/நெப்ட்யூன்-க்கும் கூட) வளையங்கள் உண்டு, யுரேனஸ்/நெப்ட்யூன்
போன்ற கிரகங்களின் காற்றுவெளி, வியாழனின் துணை கிரகமான ஐயோ (Io)வில் எரிமலை
உண்டு போன்ற என்னற்ற செய்திகளை நமக்காக கொடுத்தன இந்த கலன்கள். 1990
வாக்கில் வாயேஜர்1-ன் கேமராவை திருப்பி எடுக்கப்பட்ட சூரியக்குடும்ப
புகைப்படம் மிகவும் பிரபலம். பூமி அதில் ஒரு நீலப்புள்ளி.
அது இருக்கட்டும். முப்பத்தைந்து
வருடங்கள் கழித்து இப்போது என்ன வந்தது வாயேஜருக்கு? மனிதன் செய்த
பொருட்களிலேயே அவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் பொருள் வாயேஜர் -
நமது சூரிய குடும்பத்தின் எல்லையை தாண்டும் முதல் மனித சகவாசம் கொண்ட
பொருள் அதுவே! சென்ற வருடம் அந்த எல்லையை தாண்டி, நட்சத்திரங்களுக்கிடையில்
இருக்கும் வெளியில் தற்போது பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஹீரோயின் வீட்டை
விட்டு ஓடி போய் கொஞ்சம் லேட்டாக கண்டுபிடித்து துரத்த ஆரம்பிப்பார்களே,
அது மாதிரி எல்லையை தாண்டிவிட்டது என்று நமக்கு தெரிந்தது இப்போதுதான்.
தங்கத்தகடு:
முதலில் சொன்ன அந்த தகட்டை பற்றி பல
ரசிக்கக்கூடிய தகவல்கள் உண்டு. பூமியை பற்றியும் மனிதர்களை பற்றியும்
வேற்று ஜீவன்களுக்கு தெரிவிக்க முனையும் இந்த 'காலப்பெட்டி'யில் மனிதனின்
தோற்றம்/வளர்ச்சி போன்றவற்றை விளக்கும் 115 படங்கள், இந்திய சங்கீதம் உட்பட
பல நாட்டுக்கலைஞர்களின் இசைக்கோர்வைகள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன.
வாழ்த்துக்கள் சொல்லப்பட்ட ஐம்பைத்தைந்து மொழிகளில் கன்னடம், தெலுங்கு
போன்ற இந்திய மொழிகளும் உண்டு (தமிழ் இல்லை). அவைகளை இங்கு சென்று
கேட்கலாம்: http://voyager.jpl.nasa.gov/spacecraft/greetings.html.
அதே தகட்டில் இடம் பெற்றுள்ளார் பல்கேரிய நாட்டுப்புற பாடகர் வல்யா. அவர்
நாட்டை சேர்ந்த பலரே அறியாத அவரின் குரல், பல்லாயிரம் வருடங்களாக அண்டத்தை
சுற்றிக்கொண்டிருக்கும்!
இத்தகட்டை ஒருங்கிணைத்த குழுவின் தலைவர்
உலகப்புகழ் பெற்ற அறிஞர் கார்ல் சாகன். இந்த கலன் நெடுந்தூரம் பயணிக்க
நிறைய வாய்ப்புண்டு என்று பார்த்து பார்த்து தகவல்களை பதித்தவர். காசட்டில்
பல படங்களில் இருந்து கலவையாக பிடித்த பாடல்கள் மட்டும் பதிவு
செய்துகொண்டு திரிவோமே, அது மாதிரி (காசட்டா அப்படின்னா என்பார்களா
லேட்டஸ்ட் தலைமுறை?).
அதன் உள்ளடக்கத்தை பலர் பாராட்டினாலும்,
'இருக்கும் இடம் முதற்கொண்டு நம்மை பற்றி அத்தனை தகவல்களும்
வேற்றுலகவாசிகள் தெரிந்து கொண்டால், நம்மை அழிப்பதற்கு நாமே அவர்களுக்கு
திட்டம் போட்டு கொடுப்பதாகாதா?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. வெளியாள்
என்றாலே நம்மை அழிக்கத்தான் போகிறான் என்கிற மனித பயத்தில் இருந்து
உருவாகும் எண்ணம் -பக்கத்து வீடு/ஊர், பக்கத்து நாட்டு மக்களை காரணமே
இல்லாமல் எதிரியாக நினைக்கிறோமே? அது போல்.
கார்ல் சாகன் பதிலளிக்கிறார்:
"நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொலைக்காட்சி
அலைகள் கொண்டு கூட நம் இருப்பிடத்தை எளிதில் கண்டுகொள்ளலாம்" (கொல்லலாம்
இல்லை); "அப்படி வருபவர்களிடத்தில் நட்பாக இருக்க நாம்தான் கொஞ்சம்
முயல்வோமே?" மேலும், "இந்த தகட்டை படிக்க 'அவர்கள்' கொஞ்சமேனும்
முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இந்த பாட்டிலை விண்வெளிக் கடலுக்குள்
அனுப்புவதன் மூலம் இப்புவியின் உயிர் பற்றிய மிக நம்பிக்கையான ஒரு செய்தி
அறிவிக்கப்படுகிறது அல்லவா?"
பயண முடிவு?
இப்போது வாயேஜரின் கேமராக்கள் அணைத்து
வைக்கப்பட்டுள்ளன. ஏன்? சுற்றுலா போய் விட்டு எப்போது நாம் போட்டோ
பிடிப்பதை நிறுத்துவோம்? அதேதான். பேட்டரி பிரச்சினை. மினி ப்ளூட்டோனியம்
ரியேக்டர்கள் மூலம் கிடைக்கும் சொற்ப சக்தியை கொண்டு தற்போது இயங்கும்
வாயேஜர், இன்னும் 12 ஆண்டுகளில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போய்விடும்.
அதனால் முடிந்தளவு தேவை இல்லாத சாதனங்களை அணைத்து வைத்துவிடுகிறார்கள். சில
அதுவாகவே செயலற்று போய் விட்டது; Cosmic Ray System போன்ற சாதனங்கள்
பிரதிபலன் பாராமல் இன்னும் உழைக்கிறது. மின்சக்தி எல்லாம் தீர்ந்து போய்
அதற்கும் மனிதனுக்கும் நடக்கும் கடைசி பரிவர்த்தனை 2025 வாக்கில்
இருக்கும். அதற்கு பிறகு நாம் இருப்போமோ இல்லையோ, பல ஆயிரக்கணக்கான,
லட்சக்கணக்கான வருடங்களுக்கு வாயேஜர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான்
இருக்கும்.