விசித்திரமான பாலைவனத்தில் கிடைத்த வித்தியாசமான எலும்புக்கூடு


ஆஸ்கார் முனோஸ் அவர்கள் 2003 ஆம் ஆண்டு, “லா நொரியா” என்றழைக்கப்படும் அடகாமா பாலைவனப் பகுதியில் ஒரு எலும்புக்கூடினைக் கண்டுபிடித்தார். 15 செ.மீ க்கும் குறைவாக இருக்கும் இந்த எலும்புக்கூடு கடினமான பற்களையும், பெரிய தலைப்பகுதியையும் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
10 ஆண்டுகளாக இந்த எலும்புக்கூடு வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கு ஒரு உதாரணமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த எலும்புக்கூடு பற்றி பல கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருந்தன. இது ஒரு குரங்கு இனமாகவோ அல்லது வேற்று கிரக வாசியாகவோ இருக்கலாம் என கற்பனை செய்யப்பட்டன. ஆனால் இதுவும் மனித இனம் தான் என தற்போதைய ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
இது பற்றி டி.என்.ஏ. மற்றும் பிற ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட டாக்டர் ஸ்டீவன் க்ரீர் தலைமையிலான குழு “இந்த உயிரினம் கண்டிப்பாக மனித இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்று உறுதிபடக் கூறுகிறது. அத்துடன் இவரின் கருத்துக்களை ஸ்டான்ஃபோர்டில் உள்ள டாக்டர் நோலன் மற்றும் டாக்டர் லாக்மான் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

மனித இனம் அழிய எவ்வளவு காலமாகும்

நமது மனித இனம் முழுமையும் அழியும் நிலை வந்தால், நாம் இருந்த சுவடே இல்லாமல் அழிய எத்தனை காலமாகும்?
தொல்பொருள் அளவீடுகளின் படி பார்த்தால்: நாளைக்கே நாம் அழிவதாக இருந்தால், பல நூறு ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வந்த கட்டிடங்கள் சிதையத் தொடங்கும். இதில் கடின உழைப்பால் உருவான கிரேக்க கோவில்கள், எகிப்து பிரமிடுகள் போன்றவை எஞ்சியிருக்கலாம். ஏனெனில் அவை இன்றும் நம்முடன் இருக்கின்றன.
புவியியல் அளவீடுகளின் படி பார்த்தால்: ஐரோப்பா நாடுகள் நிலப்பகுதியாக இருந்ததை விட நீர்ப்பகுதியாக இருந்ததற்கு அதிகப்படியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன்படி பார்த்தால் மறுபடியும் ஒரு நாள் அனைத்து நிலப்பரப்பும் கடலால் மூழ்கடிக்கப்படும். அந்தக் காலகட்டத்தில் நமது சுவடுகள் மற்ற பாறைகள் அல்லது மண் சிதைவுகளுக்கிடையே பதிக்கப்பட்டிருக்கும். இப்படித் தான் நாம் டைனோசரின் சுவடுகளைப் பாறை படிநிலைகளில் இருந்து எடுத்தோம்.
இதுவரை கண்டறியப்பட்டதில் ஒரு செல் பாக்டீரியாவின் படிமங்கள் தான் மிகவும் பழமையானது. கணிப்பின் படி அவை சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை. அதே அளவீடுகள் தான் நம் இனத்திற்கும். நம்மில் சிலர் படிமங்களாகலாம் அல்லது பாறை படிநிலைகளாகலாம்.

விண்வெளியில் உடனே இறக்க முடியாது

நாம் பெரும்பாலும் பார்க்கும் ஹாலிவுட் அறிவியல் திரைப்படங்களில் ஏதேனும் வித்தியாசமாக காட்டுவார்கள். அதில் மனிதன் விண்வெளியில் தொலைந்து போவதாக இருந்தால் அவரின் உடல் வெடித்துவிடும் அல்லது இறந்துவிடுவர் என்பது போல் சித்தரித்து இருப்பார்கள். ஆனால் இது உண்மையில்லை. நமக்கு ஒரு ஆச்சரியமூட்டும் கதையைத் தருவதற்காக அவ்வாறு உருவாக்குகின்றனர்.
உண்மையில் நாம் விண்வெளிக்குச் சென்றால் 15 முதல் 30 வினாடிகள் வரை உயிர்வாழமுடியும். அதாவது நாம் சுவாசிக்கும் வரை உயிரோடு இருப்போம். நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் இரத்தச்செல்கள் நம் உடலைப் பாதுக்காக்கும். ஆனால் அதன் பிறகு அங்கு சுவாசிப்பதற்கு காற்று இல்லாததால் சுயநினைவினை இழக்கத் தொடங்குவோம், பின்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடுவோம்.